இந்திய ரயில்வேயானது, புறநகர் ரயில்கள் முதல் வெளியூர், வெளி மாநிலம் செல்லும் 13,169 பயணிகள் ரயில்களை இயக்கி வருகிறது. இந்தியா முழுவதும் 7,325 ரயில் நிலையங்களையும் நிர்வகித்து வருகிறது. குறிப்பாக, மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிகவும் பொதுவான ரயில் வகைகளாக இருந்து வருகின்றன. ரயில் வழித்தடங்களைப் பொறுத்தவரையில், இந்திய ரயில்வே, இந்தியா முழுவதும் 92,952 கி.மீ. நீள ரயில்வே வழித்தடத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பராமரிக்கிறது. இவற்றை, ஆண்டுதோறும் வரும் வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தரம் ஒன்று முதல் ஆறு வரை வகைப்படுத்தியுள்ளது. தரம் ஒன்று நிலையங்கள் ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதுடன், 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை கையாள்கின்றன.
ரயில்வே அமைச்சகத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குனர் திலீப் குமார் இது குறித்து கூறுகையில், இந்தியாவின் ரயில் நெட்வொர்க் 70,000 கிலோ மீட்டருக்கும் மேல் நீளமானது. இதில் தினசரி 13,000 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன, சரக்கு ரயில்களுடன் சேர்த்தால், மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23,000 ஆகும். ஒவ்வொரு நாளும் 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்றார்.
வருவாயின் அடிப்படையில் இந்தியாவின் முதல் ஐந்து ரயில் நிலையங்களின் பட்டியல்:
| 1. புது டெல்லி நிலையம் (டெல்லி) | ரூ.3,337 கோடி |
| 2. சென்னை சென்ட்ரல் (தமிழ்நாடு) | ரூ.1,299 கோடி |
| 3. ஹைதராபாத் (தெலங்கானா) | ரூ.1,276 கோடி |
| 4. ஹவுரா (மேற்கு வங்கம்) | ரூ.1,276 கோடி |
| 5. ஹஸ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) | ரூ.1,227 கோடி |
புது டெல்லி ரயில் நிலையம் குறிப்பிடத்தக்க அளவிலான வித்தியாசத்துடன் முதலிடம் பிடித்திருந்தாலும், அடுத்த நான்கு நிலையங்களின் வருவாயில் சிறிய அளவிலான வேறுபாடே உள்ளது.
முதல் ஐந்து இடங்களைத் தவிர, ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டும் பிற முக்கிய ரயில் நிலையங்களாவன:
- மும்பை சிஎஸ்டி
- லோக்மான்ய திலக் டெர்மினஸ் (மும்பை)
- சூரத்
- அகமதாபாத்
- ஆனந்த் விஹார் (டெல்லி)
- பாட்னா
- புனே
- விஜயவாடா
- ஜெய்ப்பூர்
- நாக்பூர்
- தானே
- ஆக்ரா கான்ட்
- அம்பாலா கான்ட்
- பெங்களூரு
- பரேலி
- கல்யாண்
இந்த ரயில் நிலையங்கள் அதிக வருவாயையும், மில்லியன் கணக்கான பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து புள்ளிகளாகவும் செயல்படுகின்றன.
September 21, 2025 3:19 PM IST
