அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் காத்திருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருளாதாரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடும் அறிவிப்புகள் உலகம் முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்காகப் பெறக்கூடிய “h1 b1′ விசாவைப் பெறுவதற்குக் கட்டணத்தைப் பல மடங்கு அவர் உயர்த்தி இருக்கிறார்.
அதன்படி இந்த விசாவைப் பெறுவதற்கு வெறும் 4 லட்ச ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்த நிலையில் இனி இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டி இருக்கிறது.
இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விகடன் சார்பாக சர்வதேச அரசியலையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வரும் லயோலா கல்லூரியின் மூத்த பேராசிரியர் டாக்டர் கிளாட்சன் சேவியரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட சில முக்கியமான கேள்விகளும், அதன் சொன்ன பதில்களும் இங்கே!
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்: நீண்டகால பிரச்னைகள், உடனடி பிரச்னைகள் என இரண்டும் இதில் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம் .
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காகத்தான் இந்த விசா கொடுக்கப்படுகிறது . ஆண்டிற்கு 50000 விசாக்கள் வரை இப்படிக் கொடுக்கப்படும் . அது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்கள் இந்தியர்கள் தான் பெறுகிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் இப்படி வெளிநாட்டினவரைப் பணியாற்ற வைக்க வேண்டும் என்பதில்லை.
