Last Updated:
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றார்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாதனை படைத்தார்.
உஸ்பெகிஸ்தானில் கடந்த 2ஆம் தேதி முதல் செஸ் தொடர் நடைபெற்ற நிலையில் மொத்தம் 11 சுற்றுகளில் விளையாடிய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி 6 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கடந்த ஆண்டும் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிராண்ட் மாஸ்டர் வைஷாலியின் வெற்றி வெறும் தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்லாமல் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், உலக அரங்கில் தங்கள் கனவுகளை பிரதிபலிப்பதை காணும் எண்ணற்ற பெண்களுக்கு ஒரு கொண்டாட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் வைஷாலியை பாராட்டி பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், வைஷாலியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்; அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பு முன்மாதிரியானவை என பதிவிட்டுள்ளார்.
September 16, 2025 9:11 AM IST

