எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராக செங்கோட்டையன் இருக்கிறார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி வந்த பிறகு செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் பதவிகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். பிறகு நடந்த தேர்தலில் அந்தியூரில் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்கு செங்கோட்டையன்தான் காரணம் எனச் சொல்லி, அவருக்குத் தெரியாமல் கட்சிக்குள் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் செங்கோட்டையன் கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றார். இதையடுத்து கோவையில் எடப்பாடிக்கு நடந்த அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பாராட்டு விழாவைப் புறக்கணித்தார். அதற்கு அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை எனக் கூறினார். கூடவே டெல்லி பா.ஜ.க தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலால் அமைதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான், “அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாள்களில் எடப்பாடி தொடங்க வேண்டும்’ என செங்கோட்டையன் கெடு விதித்தார். இதையடுத்து செங்கோட்டையனிடமிருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறித்து அதிர்ச்சி கொடுத்தார், எடப்பாடி. இதையடுத்து டெல்லிக்குப் புறப்பட்டார், செங்கோட்டையன். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “நான் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்குச் செல்கிறேன். பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்கச் செல்லவில்லை” என்றார். எனினும் செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதை டெல்லியிலிருந்து திரும்பிய செங்கோட்டையனும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
