Last Updated:
பீகார் தேர்தலை முன்னிட்டு முதல்வர் நிதிஷ் குமார் அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பீகாரின் ஆளும் ஜனதா தளமும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஜனதாதளம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மறுபக்கம் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய ராஷ்ட்ரிய ஜனதாதளம் தீவிரமாக இயங்கிவருகிறது.
இந்தச் சூழலில், அம்மாநிலப் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% இடஒதுக்கீட்டை முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இது ஆட்சியை கைப்பற்றப் பெண்களின் வாக்குகளைக் கவருவதற்கான அறிவிப்பு எனும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், பீகார் மாநிலப் பெண்களுக்கு மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைப் பணிகளிலும் 35 சதவீதம் இடஒதுக்கீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதிஷ் குமார், “பீகார் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும், பீகார் இளைஞர் ஆணையத்தை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பீகார் இளைஞர் ஆணையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஏற்கனவே மதுவுக்குத் தடை உள்ளிட்ட காரணங்களால் பெண்களின் ஆதரவு ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதாதளம் கட்சிக்கு அதிகம் இருந்துவரும் சூழலில், தற்போது அரசுப் பணியில் 35 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு எனும் அறிவிப்பு இன்னும் பெண்கள் வாக்கை கவர்வதற்கு வலுசேர்க்கும் எனச் சொல்லப்படுகிறது.
July 08, 2025 6:30 PM IST

