குறிப்பாக, நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காக வாதாடிய, மூத்த வழக்கறிஞர் திரு. அபிஷேக் சிங்வி அவர்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார். மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமைச் சட்டங்களும் நேரடியாகக் கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். எனவே, இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் பதிலுக்குப் பதிலுரையைத் (Rejoinder) நமது தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை. நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. அந்தப் பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம், அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போது புதிய வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாகிவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா? மக்களுக்கு வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?
