Last Updated:
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில், தற்போது சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த பின் அதன் நிலை என்ன?
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதற்கு முன்னதாக தாக்குதல் நடந்த மறுநாள் அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் மிகவும் முக்கியமானது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போது பேசியுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தனது ஆதரவை கைவிடும் வரை, இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கும்.
நல்லெண்ணம் மற்றும் நட்பின் உணர்வில் 1960 இல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் பாகிஸ்தான் இந்தக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால தேசிய நிலைப்பாடு. அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நிலுவையில் உள்ள விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை விட்டுக்கொடுப்பதுதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

