இந்தியா – பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அவசரமாக தலைநகர் தில்லிக்கு வந்துள்ளார்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் “ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்கள் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் எல்லையிலுள்ள இந்தியப் பகுதிகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால், இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதெல் அல்-ஜுபெர் அவசரமாக இன்று (மே 8) தில்லி வந்துள்ளார். முன்னறிவிப்பு ஏதுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியுள்ளார்.
