உள்ளூர் மக்களின் கருத்துகள் அவசியம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன் கூறுகையில், “மீன்பிடி தடைக்காலத்தில் கடல் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், எண்ணெய் எடுப்பு பணிகளுக்கு இதுபோன்ற தடைகள் இல்லை. இது கடல் வாழ்வாதாரத்தை பாதிக்கும்,” என்றார். மேலும், சுற்றுச்சூழல் விதிகளின்படி, ஆழ்கடல் பணிகளுக்கு உள்ளூர் மக்களின் அனுமதி பெற வேண்டும் எனவும், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தமிழக அரசு இதற்கு முன்பு ராமநாதபுரம் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போதைய அனுமதிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
