Last Updated:
இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ATM இயந்திரத்தை மத்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. எந்த இடத்திலும் பணத்தை நேரடியாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது. ஆனாலும் சில இடங்களில் தற்போதும் ரொக்க பணம் மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆகையால், பணம் எடுப்பதில் ஏ.டி.எம் இயந்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மட்டுமே இதுவரை இருந்த ஏ.டி.எம் இயந்திரங்கள், தற்போது முதன்முறையாக மும்பையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் ஏ.டி.எம்.சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு மத்திய ரயில்வே மண்டலம் இயங்குகிறது. இதன் சார்பில் ரயில் பயணிகளுக்காக ஓடும் ரயிலில் ஏ.டி.எம். சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், மகாராஷ்டிராவின் மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து புறப்பட்டு, நாசிக் அருகே உள்ள மனமாத் சந்திப்புக்கு தினந்தோறும் செல்கிறது.
இதன் ஏ.சி. பெட்டியின் கடைசியில் சோதனை முயற்சியாக ஏ.டி.எம். இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை தனியார் வங்கி வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. ரயில் வேகமாக செல்லும் போது இயந்திரம் அசையாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விரைவில் இந்த சேவை பயணியருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
April 17, 2025 9:06 AM IST


