28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தையும், மாநில அரசையும் கண்டித்து தன்னாட்சி, அறப்போர் இயக்கம், மக்களின் குரல், IGG, தோழன் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகில் உண்ணாவிரதம் மற்றும் தொடர் கண்டன உரைப் போராட்டத்தை நடத்தின.
`ஊராட்சி தேர்தல் எங்கள் உரிமை, உடனே நடத்துவது உங்கள் கடமை” என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை தொடங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றால் முழுக்க முழுக்க அரசியல் காரணம் மட்டும் தான். அரசியல் சாசனப்படி ஜனவரி 2025-க்குள் 28 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு எந்த காரணமும் சொல்லிவிட முடியாது. உதாரணமாக, 2026ல் சட்டசபை தேர்தல் நடத்த தேவையில்லை ஒரு வருடம் தள்ளிப் போடலாம் என்று மத்திய அரசாங்கம் சொல்கிறதென்றால், மாநில அரசு என்ன சொய்யும்? திமுக அரசு என்ன மாதிரியான போராட்டங்களை நீங்கள் முன்னெடுப்பீர்கள்? அப்போது, அதை எந்தளவுக்கு அநியாயம் என்று நீங்கள் பேசுகிறீர்களோ இன்றைக்கு அதே அநியாயத்தை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

