டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். தற்போதையை மக்களவை பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ள கட்சிகள், கூட்டணி குறித்த பேச்சுகளையும் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் விதமாக, ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்கட்சிகளின் வியூகங்களை முறியடிக்கும் வகையில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவும், தமிழக பாஜகவுக்கும் மோதல் போக்கு இருந்து வருவதால், எதிர்வரும் மக்களவை தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தற்போது இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது; நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக பாஜக மேற்கொண்டிருக்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசியல் சூழல், அதிமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் 200 நட்கள் நடைபெறவுள்ள, பாதயாத்திரை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

