தற்போது சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வந்தது. அதனால் அப்போது இந்த திட்ட செலவின் 90 சதவிகிதத்தை மாநில அரசே ஏற்க வேண்டியதாக இருந்தது. மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருந்தாலும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு கடனாக பெற்ற ரூ.32,548 கோடிக்கு மத்திய அரசு உதவி செய்தது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் படி, இனி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான கிட்டதட்ட 65 சதவிகித தொகையை மத்திய அரசு வழங்கும். இதில் முழுக் கடன் ரூ.33,503 கோடியும், சார்நிலைக் கடன் ரூ.7,425-ம் அடங்கும். மீதி 35 சதவிகிதத்தை மாநில அரசே ஏற்கும்.
பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பு, இந்த திட்டத்திற்கு கடன் பெறுவது அல்லது அதற்கான ஏற்பாடுகள் செய்வது மாநில அரசுக்கானதாகும். ஆனால் தற்போது அளித்துள்ள ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
