Last Updated:
உலகப்புகழ் பெற்ற புரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 600 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் அழகிய கடற்கரை நகரான புரியில் அமைந்துள்ள இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும்.கோயில் மூலவர்களான ஜெகன்நாதர், பலராமன் மற்றும் தேவி சுபத்ராவை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும், இக்கோயிலின் ரத யாத்திரை தனி சிறப்பு வாய்ந்ததாகவும்.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. ஜெகநாதர் தேரில் வெள்ளை நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள், பாலபத்திரர் தேரில் கருப்பு நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள், சுபத்ரா எழுந்தருளும் தேரில் சிவப்பு நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. இத்தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் இழுத்தனர்.
முதலில் பாலபத்திரர் தேர், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர், இறுதியாக ஜெகநாதரின் தேர் புறப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் புரி நகரின் வீதிகளில் அசைந்தாடி சென்றதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரசித்தினர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பாலபத்திரரின் தேரில் உள்ள புனித கயிறை இழுக்க பக்தர்கள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடும் வெப்பத்துடன் கூட்ட நெரிசலும் ஏற்பட்டதால், சுமார் 600 பக்தர்கள் காயம் அடைந்தனர். பெருந்திரளான கூட்டத்தை கட்டுப்படுத்திய பாதுகாப்பு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கும் விரைவாக வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்தவர்கள் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்தவர்கள் கோயிலில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாம்களிலேயே சிகிச்சை பெற்றனர். 9 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவில், எதிர்வரும் நாட்களில் கூட்ட நெரிசல் நேராமல் இருக்க பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.
Odisha (Orissa)
June 28, 2025 10:34 AM IST


