டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி தொடர்பான தேசிய மாநாட்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஷஷாங்க் பிரியா இந்த ஆய்வு குறித்து கூறுகையில், “இந்த ஆய்வுக்காக 69,600 ஜி.எஸ்.டி அடையாள எண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை 59,178 அடையாள எண்கள் கள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்களில், 16,989 எண்கள் புழக்கத்திலேயே இல்லை. 11,015 அடையாள எண்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 4,972 போலி ஜி.எஸ்.டி பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ.15.35 கோடிக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியாக பெற முயற்சிக்கப்பட்ட ரூ.1,506 கோடி உள்ளீட்டு வரி முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.87 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி பதிவிலும், கணக்கு தாக்கலிலும் உள்ள ஓட்டைகளை சரிசெய்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு தெரியப்படுத்தி உள்ளது. வர்த்தகர்கள் மாதா மாதம் கணக்கு தாக்கல் செய்யும் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவம் வர்த்தகர்களுக்கு ஏற்ப சீர்படுத்தப்பட உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது, ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 1.40 கோடியாக உயர்ந்துள்ளது” என்று பேசியுள்ளார்.

