விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த பந்த்வார்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
சனிக்கிழமை தொழிலாளர்கள் வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 8.30 மணியளவில் ஓர் அறையில் பட்டாசு தயாரிக்கத் தேவையான மருந்துக் கலவையில் உராய்வு காரணமாக தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் பற்றிய தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் பல அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
