புதிதாக தொடங்கப்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 5 பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும்; அவற்றில் ஒரு பாடப்பிரிவுக்கு 56 மாணவர்கள் வீதம் மொத்தம் 280 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 420 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு புதிய உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமல்லாமல் இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட கல்லூரிகளிலும் கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தான் அயல்பணி முறையில் இந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்காக ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் அயல்பணியில் அனுப்பப்படுவதால், அந்தக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000&க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. இத்தகைய சூழலில் அவற்றின் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும்?
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் 4000 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் ஓய்வு பெற்று விட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இவ்வளவுக்குப் பிறகும் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வரவில்லை என்றால் அவற்றை யாரும் காப்பாற்ற முடியாது.
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, சிறந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையைக் கூட செய்யத் தவறி விட்ட திமுக அரசு, உயர்கல்வியை சீரழித்து வருகிறது. இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளை கெடுக்கும் திமுக அரசை, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே சரியான நேரத்தில் வீழ்த்தி, பாடம் புகட்டுவார்கள். இது நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்
