ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ் வதாவனை சிபிஐ கைது செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீரஜ் வதாவன் மற்றும் கபில் வதாவன் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களில் டிஎச்எஃப்எல் எனப்படும் தீவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக தீரஜ் வதாவன் இருந்தபோது, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து, பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அதாவது, இருவரும் சேர்ந்து 17 வங்கிகளில் சுமார் ரூ.34,000 கோடியை கடன் பெற்று மோசடி செய்ததாக, அந்த வங்கிகள் புகார் அளித்தது. நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடியாக கருதப்பட்ட இந்த புகாரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த ஜூலை, 2023ல் தீரஜ் வதாவனை கைது செய்தது. இருப்பினும், அதே ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் தீரஜ் வதாவனுக்கு ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தாலும், அவரது ஜாமின் ரத்து செய்யப்படவில்லை.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிபிஐ, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் சட்டவிதிகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்று வாதிட்டது. இதையடுத்து, தீரஜ் வதாவனின் ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, மும்பையில் இருந்த தீரஜ் வதாவனை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
