Last Updated:
ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான விண்வெளி ஆர்வலர் ஜானவி டாங்கெட்டி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான டைட்டன் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TSI) உடன் எதிர்கால பணிக்கான விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) மிஷனில் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த இந்தியரான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை உலகம் கொண்டாடிவரும் வேளையில், மற்றொரு இளம் இந்தியர் அமைதியாக தனது பெயரை நட்சத்திரங்களில் பொறித்துள்ளார்.
“எங்கள் புதிய ASCAN (விண்வெளி வீரர் வேட்பாளர்) குழுவின் உறுப்பினராக ஜானவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறோம்” என்று டைட்டன் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. இது இளம் இந்தியரான ஜானவிக்கு ஒரு அசாதாரண பயணத்தின் தொடக்கமாக இருக்கும்.
இது குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துகொண்ட ஜானவி, “2025-ம் ஆண்டுக்கான டைட்டன்ஸ் ஸ்பேஸ் – தொடக்க வகுப்பிற்கான விண்வெளி வீரர் வேட்பாளராக (ASCAN) அதிகாரப்பூர்வமாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமிதமும், உற்சாகமும் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
“2029-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள இதற்கான தொடக்கப் பணி, டைட்டன்ஸ் விண்வெளி சுற்றுப்பாதைப் பயணமாக 5 மணி நேரம் நீடிக்கும். இது 3 மணிநேர நிலையான பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைக் கொண்டிருந்து, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளிப் பயண முன்னேற்றத்திற்கான தனித்துவமான மாற்றத்தக்க சூழலை வழங்குகிறது. நாங்கள் பூமியை இரண்டு முறை சுற்றி வருவோம். அதில் இரண்டு சூரிய உதயங்களையும் இரண்டு சூரிய அஸ்தமனங்களையும் காண்போம். இவை அனைத்தும் ஒரே மிஷனில் நடக்கப்போகிறது” என்றும் அவர் கூறுகிறார்.
பஞ்சாபில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மாணவியான ஜானவியின் விண்வெளிப் பயணம், இந்த அறிவிப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது பெற்றோர் பத்மஸ்ரீ மற்றும் ஸ்ரீனிவாஸ் குவைத்தில் வசித்து வரும் நிலையில், ஜானவி கோதாவரி பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
2022-ம் ஆண்டில், போலந்தின் கிராகோவில் உள்ள அனலாக் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தால் (AATC) தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய வெளிநாட்டு அனலாக் விண்வெளி வீரர் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஜானவி பெற்றார். மேலும், அவர் நாசாவின் ஆதரவுடன் கூடிய சர்வதேச வானியல் தேடல் ஒத்துழைப்பிலும் (IASC) பங்கேற்றதோடு ஹவாயின் பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கியிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவு மூலம் சிறுகோள் கண்டறிதலுக்கும் பங்களிப்பு செய்தார்.
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் நடைபெற்ற ஐந்து நாள் திட்டமான நாசாவின் IASP-யில் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவர்தான். இதில் விண்வெளி அறிவியல், ராக்கெட் வடிவமைப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சி ஆகியவை அடங்கும். நாசா விண்வெளி செயலிகள் சவாலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட விருது மற்றும் இஸ்ரோவின் உலக விண்வெளி வாரத்தில் இளம் சாதனையாளர் விருது ஆகியவை ஜானவி பெற்ற பிற பாராட்டுகள் ஆகும். இந்த சாதனைகள் எல்லாம், விண்வெளியில் இளம் சக்தியாக தீவிரமாக வளர்ந்துவரும் ஜானவியின் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டும் அங்கீகாரங்கள் ஆகும்.
June 27, 2025 6:02 PM IST

