229 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அதிமுக எம்எல்ஏ ஜெயராமன், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் தப்பிக்க அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது:
கோவை, விளாங்குறிச்சி கிராமம், கொடிசியா அருகே 45.82 ஏக்கா் புன்செய் நிலங்கள் தமிழ்நாடு நில சீா்திருத்தம் மற்றும் உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பு செப்டம்பா் 7-ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில், மேற்படி நிலங்கள் முழுவதும் அரசு உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இந்த நிலங்களை மீட்கும் பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனா். அதன்படி, ரூ.229 கோடி மதிப்புள்ள 45.82 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு, அவை அரசுக்கு சொந்தமான இடங்கள் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 புல எண்களின் கீழ் 45.82 ஏக்கா் நிலம் இருக்கும் நிலையில், இதில் 2 புல எண்களில் நகர ஊரமைப்புத் திட்ட இயக்ககத்தின் அனுமதி பெற்று 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற 8 புல எண்களில் இருக்கும் இடம் காலி இடமாகவே உள்ளது.
கட்டப்பட்டுள்ள 23 வீடுகளில் பாஜகவின் மாநகா் மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தம ராமசாமியின் வீடும் அடங்கும். மேலும், அங்குள்ள 20 காலி மனைகளையும் சிங்காநல்லூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் விற்பனை செய்துள்ளாா். இந்த வீடு, மனைகள் அரசின் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவற்றுக்கு வழங்கப்பட்ட நகர ஊரமைப்புத் திட்ட இயக்ககத்தின் அனுமதி ரத்து செய்யப்பட இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

