காசா: இஸ்ரேல் தாக்குதலில், 9,400 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், ஒரு மாதத்தை எட்ட உள்ளது.
இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் பிரிவினர் குற்றம் சாட்டி உள்ளனர். அதேநேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை பாலஸ்தீனத்தை சேர்ந்த 9,400 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அமைச்சருக்கு அழுத்தம்
இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனுக்கு அரபு நாட்டு தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
போர்க்குற்றம்
ஈரான் துணை அதிபர் முகமது மொக்பெர் கூறுகையில், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம் எனவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

