“இந்தியாவோட பொருளாதாரம் வளருது… அது வளருது… இது வளருதுனு சொல்றாங்க. ஆனா என்னோட சம்பளம் மட்டும் பல வருசமா வளராம, அப்படியே இருக்கு” என்ற கண்ணீர் குரல்கள் சுங்குவார்சத்திரத்தில் கேட்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஆலை அருகே…
“எங்களோட புது யூனியன் சங்கத்தை அங்கீகரிக்கணும்’
‘சம்பளத்தை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தணும்’
‘எங்களுக்கு வேலை செய்யறதுக்கு ஏத்த சூழலை உருவாக்கி தரணும்’
இந்த மூன்று கோரிக்கைகளோடு, சுட்டெரிக்கும் வெயிலில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் சாம்சங் ஆலை…
தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் சாம்சங். இது இந்தியாவில் இரண்டு இடங்களில் இயங்கி வருகிறது. ஒன்று உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டாவில், இன்னொன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீபெரும்புதூரில்.
தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் ஆலையில் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை சாம்சங் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி தருகிறது. இது இந்தியாவிலிருந்து சாம்சங் நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
