Last Updated:
விவசாயிகளின் நலனுக்காக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற விவசாய மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் போர்ச் சூழல் நிலவியபோது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த நிலையிலும், விவசாயிகளின் நலனுக்காக டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விவசாய மாநாட்டில் பேசிய பிரதமர், போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 70 டாலரிலிருந்து 122 டாலராக உயர்ந்தபோது, டீசல் விலையை லிட்டருக்கு குறைந்தது 50 ரூபாய் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறினார்.
ஆனால், விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வெறும் 7 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, மீதமுள்ள 43 ரூபாய் சுமையை அரசே ஏற்றுக்கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.
அண்டை நாடுகளில் டீசல் விலை 50 சதவீதம் வரை உயர்ந்தபோதும் இந்தியாவில் அவ்வாறு நிகழவில்லை என்றும், அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசு தாங்கிக் கொள்வதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்
வேளாண் துறையின் பெயரால் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளின் சுயலாப அரசியலைச் சாடிய பிரதமர், விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

