16 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறியவர்; லண்டனில் குடியுரிமை பெற்று புதிய அத்தியாயம் தொடங்கியதாக அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட்டின் வர்த்தக முகத்தையே மாற்றியமைத்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களுள் லலித் மோடியும் ஒருவர் . தற்போது அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுவருகிறது
லண்டனில் குடியுரிமை விழா!
நவம்பர் 14-ம் தேதி லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றிய லலித் மோடி, தான் பிரிட்டிஷ் குடிமகனாக மாறியுள்ளதாகப் பொதுவெளியில் அறிவித்தார். உண்மையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதியே குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் குடியுரிமையைப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) பதிவில், “இங்கிலாந்து பல ஆண்டுகளாக எனது வீடாக இருந்து வருகிறது. அந்நாட்டின் மக்கள், அமைப்புகள், பாரம்பரியங்கள் மற்றும் மதிப்புகளை ஆழமாக மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் குடியுரிமை என்பது பெருமை மட்டுமல்ல, பொறுப்பும்கூட என்றும் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், “God Save the King” என்றும் பதிவிட்டுள்ளார்.
2010-ல் இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன்?
2010-ம் ஆண்டு ஐபிஎல் நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) லலித் மோடி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டு மே மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசிக்கத் தொடங்கினார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து, 2015-ல் பணமோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. இருப்பினும், தாம் எந்தக் குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை என்றும், தன்னைத் தப்பியோடியவர் என்று அழைப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்.
புதிய அத்தியாயம்!
இந்தியாவில் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றிருப்பதாக லலித் மோடி அறிவித்திருப்பது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
