Last Updated:
உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவைப் பொறுத்தவரை ‘குவாட்’ என்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பகமான கூட்டாண்மை என்று குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ‘குவாட்’ (Quad) அமைப்பின் உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் போது பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை மிகவும் கடினமான மற்றும் உறுதியான மனிதர் (“Tough man”) என்றும், தனது நெருங்கிய நண்பர் என்றும் வர்ணித்தார். மேலும் நகைச்சுவையாகக் குறிப்பிடுகையில், “பிரதமர் மோடி மிகவும் உறுதியான மனிதர், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அவரை விடவும் உறுதியானவராக இருக்கலாம்; ஆனால் நானும் அல்பானீஸும் சாதாரணமானவர்கள் தான்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான தனது நட்புறவு மற்றும் அடிக்கடி நிகழும் உரையாடல்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட டிரம்ப், மோடிக்காகத் தனது தொலைபேசி எப்போதும் திறந்தே இருக்கும் (“My phone is always open”) என்று கூறினார்.
தாங்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வதாகவும், இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்துத் தலைவர்களும் மிகவும் மதிக்கத்தக்கவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஹோவர்ட் லுட்னிக், மார்கோ ரூபியோ, ஸ்காட் பெசென்ட் மற்றும் ஸ்டீபன் மில்லர் ஆகிய முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
மறுபுறம், உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவைப் பொறுத்தவரை ‘குவாட்’ என்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பகமான கூட்டாண்மை என்று குறிப்பிட்டார். கடல்சார் பாதுகாப்பு முதல் நம்பகமான விநியோகச் சங்கிலிகள் வரை, மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் முதல் பேரிடர் மேலாண்மை வரை அனைத்துத் துறைகளிலும் நம்பகமான தீர்வுகளை வழங்குவதே குவாட் அமைப்பின் நோக்கமாக இருந்து வருகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், குவாட் கூட்டாளிகளான இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் முக்கிய கனிமங்கள் (Critical minerals) தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதும், எந்தவொரு தனிப்பட்ட வெளிநாட்டு விநியோகஸ்தரையும் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமாகும். இந்தப் புதிய ஒப்பந்தங்கள் நான்கு நாடுகளையும் மேலும் வலிமையாக்கும் என்றும், எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் பொருளாதார அழுத்தத்திற்கும் அல்லது மிரட்டலுக்கும் குவாட் நாடுகள் ஆளாகாமல் பாதுகாக்கும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

