Last Updated:
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தகம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தகம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
544 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, இந்தியாவில் தனது வாழ்கை மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரின் குடும்ப இழப்புகள் தன்னை எவ்வாறு வடிவமைத்தன என்பது குறித்து சோனியா காந்தி உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது நட்புறவு மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், பிரதமர் அலுவலக கோப்புகளை தனது பார்வைக்கு அனுப்புமாறு கேட்டதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டு கால ஆட்சியில் மன்மோகன் சிங் அரசை நிர்வகித்ததாகவும், தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதில் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கே உரியது என்பதை தான் மதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி அமைப்பதற்காக, 2003ஆம் ஆண்டு முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது ஏற்பட்ட பதற்றத்தையும் மனப்போராட்டத்தையும் சோனியா காந்தி தனது சுயசரிதையில் பகிர்ந்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி அமைப்பது, அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் சவாலாக இருந்ததாகவும், கருணாநிதியை தொடர்புகொண்டபோது மனதில் பதற்றமும், உடலில் நடுக்கமும் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்குத் தமிழ் தெரியாது, கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது என்றாலும், அவரது பதில் அன்பாகவும் இணக்கமாகவும் இருந்ததாக சோனியா நினைவுகூர்ந்துள்ளார். தொடர்ந்து இரு தரப்பினரும் சந்தித்துப் பேசி கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

