பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் அலுவலகங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் “வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பொதுவாக, கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்திய பிறகு பலரும் வெறுமனே பிரவுசர் விண்டோவையோ அல்லது டேப்பையோ மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ‘லாக்-அவுட்’ ஆகாது. அது தொடர்ந்து பயன்பாட்டில்தான் இருக்கும்.
இதைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் உங்கள் கணக்கிற்குள் எளிதாக ஊடுருவ முடியும் என தேசிய சைபர் அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்களைப் பார்ப்பதுடன், உங்கள் பெயரிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தகவல்களை அனுப்பி பண மோசடி செய்யவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே, பிரவுசிங் மையங்கள் ஹோட்டல் பிசினஸ் சென்டர்கள், பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் கடனாக வாங்கிய லேப்டாப்களில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
