அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில் (மின்) மட்டுமே டெண்டர் விட வேண்டுமென 2023 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. ஆனால் அதை மதிக்காமல் தற்போது மேனுவலாக ஓபன் டெண்டர் விடச் சொல்லி அதிகாரிகள் வாய் மொழி உத்தரவிட்டிருக்கிறார்களாம்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் இது தொடர்பாக துறை உயரதிகாரிகளுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசு வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.
என்ன விவகாரம் என விரிவாகப் பார்க்கலாம்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு டெண்டர் விட்டு டெண்டரில் குறைவான தொகையில் அந்த வேலையைச் செய்து தரச் சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் தருவதுதான் வழக்கமான நடைமுறை.
எந்த கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பெரும்பாலும் இந்தக் காண்ட்ராக்டுகள் கிடைத்து வந்ததுதான் கடந்த காலங்களில் நடந்து வந்தது.

கட்சிக்காரர்கள் சம்பாதித்து விட்டுப் போகட்டுமென ஆட்சித் தலைமையும் இதை அனுமதிக்கும்.
ஆனால் அரசியல் பின்புலம் இல்லாத சில நிறுவனங்கள் இந்த டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் ஒரு கட்டத்தில் டெண்டர் நடைமுறையை ஆன்லைனுக்கு வேறு வழியில்லாமல் மாற்றியது கடந்த திமுக அரசு.
