Last Updated:
கர்நாடகாவில் சிக்கன் பீசுக்காக ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த அருண்குமார் கைது. சீதாராம் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் மது அருந்தும்போது, சிக்கன் பீசுக்காக ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கத்தியால் நெஞ்சில் கொலை செய்த இளைஞர் போலீசில் சிக்கினார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் மூதலகி தாலுகாவிற்கு உட்பட்ட ஹுனாஷ்யால் பிஜி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதாராம், அருண்குமார் ஆகிய இரு நண்பர்கள், பணியாற்றி வந்தனர். வேலை முடிந்து தினமும் இரவு உறங்க செல்லும் முன் மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல இருவரும் ஒன்றாக இணைந்து மது விருந்தில் ஈடுபட்டிருந்த போது தட்டில் இருந்த கோழி இறைச்சி துண்டுகளை யார் அதிகம் சாப்பிட்டது? என்பதில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சைடிஸ் குறைவாக இருப்பதாக கூறி வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தியுள்ளார். அதில் சீதாராம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அதன்பின், குற்றத்தை மறைப்பதற்காக படுகாயமடைந்த சீதாராமை கோகாக் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற அருண், கட்டடத்திலிருந்து நண்பன் கீழே விழுந்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.
ஆனால் அதில் சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்த, மது விருந்தின் போது சிக்கன் துண்டுக்காக ஏற்பட்ட தகராறில் தான் சீதாராமை கத்தியால் குத்தியதை அருண் குமார் ஒப்புக்கொண்டார். இதற்கிடையே தீவிர சிகிச்சையில் இருந்த சீதாராம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார் அருண்குமார் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாதாரண சிக்கன் பீசுக்காக ஏற்பட்ட தகராறில் நண்பனை குத்திக்கொலைசெய்த சம்பவம், கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

