இந்த முறை துப்பாக்கி முனையில் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் மிரட்டி, சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்.பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், ஹாலிவுட் படப் பாணியில் 8 பேர் கும்பல் ஆயுதங்களுடன் வந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தின் பின்னணி என்ன?
பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பெட்டியா நகரில் அமைந்துள்ளது சூப்ரியா சினிமா சாலை. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் சென்கோ கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நகைக்கடையைத்தான் குறிவைத்திருக்கிறது இந்தக் கொள்ளைக் கும்பல். நவம்பர் 18-ஆம் தேதி புதன்கிழமை பிற்பகலில், மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களுடன் நகைக்கடைக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது.
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டிய கொள்ளையர்கள், அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர். யாரும் வெளியேறவோ, போலீசுக்குத் தகவல் தெரிவிக்கவோ முடியாதபடி, அங்கிருந்தவர்களின் செல்போன்களையும் பறித்துள்ளனர்.
இதையடுத்து, கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகளை அள்ளத் தொடங்கியுள்ளனர். கொள்ளையர்களைத் தடுக்க முயன்றவர்களை ஆயுதங்களால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கப்பட்டதில் ஊழியர் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடையில் இருந்த நகைகளை அள்ளி தாங்கள் கொண்டு வந்த பைகளுக்குள் திணித்த கொள்ளையர்கள், தாங்கள் வந்த மூன்று இருசக்கர வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 30 முதல் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் ள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கொள்ளை போன நகைகளின் உண்மையான மதிப்பைக் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கொள்ளையர்கள் கடையைவிட்டு வெளியேறும்போது, “மீண்டும் வருவோம்… இது ஜஸ்ட் டிரைலர் தான் ” என்று கூறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், சம்பரான் சரக டிஐஜி ஹர் கிஷோர் ராய், பெட்டியா எஸ்பி குமார் கவுதம், டிஎஸ்பி அஜித் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கடையில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் வந்த வாகனங்கள், அவர்கள் தப்பிச் சென்ற பாதைகள் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.
பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடைக்குள் புகுந்து, ஆயுத முனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெட்டியா நகரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று பைக்குகளில் வந்த எட்டு கொள்ளையர்கள் பல கோடி ரூபாய் நகைகளை சுருட்டிக் கொண்டு இவ்வளவு துணிச்சலாகக் கொள்ளையை அரங்கேற்றிச் சென்றது எப்படி? இவர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்ற கேள்விகளுடன் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளையில், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளையும் போலீசார் முழுமையாக மீட்டனர். முக்கியக் குற்றவாளி நிஷாந்த் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பீகார் பெட்டியாவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 30 முதல் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
