பால் விலை குறைந்துள்ள நிலையில், தீவனம் மற்றும் தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து செளகுலே கூறுகையில், “‘நான் கடன் வாங்கிய பணத்தில் 15 டன் தீவனங்களை வாங்கினேன். நான் விலங்குகளுக்கு தண்ணீரும் விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எப்படியாவது சமாளித்து வருகிறோம். ஆனால் இதை எங்களால் எப்போதும் செய்ய முடியாது. நிலைமை மோசமாகும் முன் அரசாங்கம் தீவன முகாம்களைத் தொடங்க வேண்டும்” என்றார்.
விவசாயிகள் தீவனத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் தாங்கள் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிகமான விவசாயிகள் கடனில் இருக்கிறார். சில விவசாயிகள் தீவனம் வாங்க பணம் இல்லாமல் தங்களுக்கு வாழ்வளித்த கால்நடைகளை மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் கால்நடைகளை வாங்குவதற்குக்கூட ஆள் இல்லாமல் இருக்கிறது. கால்நடைகளை வாங்கிய விலையில் இருந்து பாதி விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகமான விவசாயிகள் தங்களது மனைவியின் தாலி செயினை அடமானம் வைத்து கால்நடைகளுக்கு தீவனம் வாங்கி வந்து கொடுக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் நல ஆர்வலர் அங்குஷ் கூறுகையில், “மக்கள் தங்களிடம் இருந்த ஒவ்வொரு பண ஆதாரத்தையும் தீர்ந்துவிட்டனர். உறவினர்கள், சங்கங்கள் மற்றும் கடன் வழங்குபவர்களிடம் கடன் வாங்கியுள்ளனர். பலர் கால்நடைகளை வாங்குவதற்கு ஏற்கனவே கடன் பெற்றுள்ளனர். இப்போது அந்த விலங்குகளை வாழ வைப்பதற்காக புதிய கடன்களை வாங்குகின்றனர்” என்று தெரிவித்தார்.

13 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
மகாராஷ்டிராவில் 2022ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை 13,128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது சராசரியாக தினசரி எட்டுக்கும் அதிகமாகும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இது தெரிய வந்துள்ளது. ஆனால் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை வழங்க அரசு மறுத்துவிட்டது. தற்கொலை செய்த விவசாயிகளில் நிதி உதவிக்கு தகுதியான 7,850 விவசாயிகள் குடும்பம் தலா ஒரு லட்சம் பெற்றுள்ளன.
