கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதாவது பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான், அகல்விளக்கு பதிப்பகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும்போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது.
நூல்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா?
கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
