Last Updated:
கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் (KSHRC) இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 2027 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சிக்னல் தடுப்பான்கள் (Jammers) மற்றும் அழைப்புத் தடுப்பு கோபுரங்களால், சிறையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நெட்வொர்க் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
சிறைக்குள் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க 19 உயர்-சக்தி ஜாமர்கள் மற்றும் 3 அழைப்புத் தடுப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 2025 பிப்ரவரி மாதம் 5ஜி (5G) தொழில்நுட்பத்திற்கு இவை மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் செல்போன் அழைப்புகள் துண்டிக்கப்படுவதும், இணைய சேவை முடங்குவதும், வங்கி OTP-கள் வராததும், UPI பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடைவதும் அன்றாடப் பிரச்சினையாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) வயர்லெஸ் கண்காணிப்பு அமைப்பு (WMO) 2025 செப்டம்பரில் ஆய்வு நடத்தி, அக்டோபர் 3-ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதில், சிறை வளாகத்திற்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டிய சிக்னல் தடுப்பு அலைகள், சிறையிலிருந்து 500 முதல் 700 மீட்டர் தொலைவு வரை பரவி பொதுமக்களின் தொலைத்தொடர்பு மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகளைப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், ஜாமர்களின் சக்தியைக் குறைத்து அவற்றின் திசையைச் சிறைக்குள் மட்டும் இருக்குமாறு உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.
இருப்பினும், ஓராண்டிற்கு மேலாகியும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், சிறைத் துறையும், மத்திய-மாநில அரசுகளும் ஒருவரையொருவர் கைகாட்டித் தட்டிக்கழித்து வருகின்றன. எந்தவொரு சட்டப்பூர்வ இணையத் தடை உத்தரவுமின்றி, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவசரகாலத் தொடர்புகள் முடக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ‘இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன்’ (IFF) சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சிறை ஜாமர்களுக்கான வெளிப்படையான தேசிய வழிகாட்டுதல்கள் இல்லாததையும் இந்த அமைப்பு விமர்சித்துள்ளது.
தற்போது, கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் (KSHRC) இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 2027 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

