Last Updated:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே நடைபெறும் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை இரட்டிப்பாக்க இருநாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்ட் டி வேவர் (Bart De Wever) அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அவரைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் இருவரும் இணைந்து நடத்திய கூட்டுச் செய்திதாளாளர் சந்திப்பில், இருநாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாயின.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான நட்புறவும் பங்களிப்பும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். குறிப்பாக, இருநாடுகளும் இணைந்து ‘ஜோராவர்’ (Zorawar) இலகுரக யுத்த டாங்கியை (Light Tank) உருவாக்கும் திட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இதுதவிர, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் (Clean Energy) ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் பெல்ஜியம் நிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் ‘ஃபாஸ்ட் டிராக்’ (Fast Track Mechanism) நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார். அத்துடன், வைரம் வர்த்தகத்தில் (Diamond Trade) பெல்ஜியம் பிரதமர் அளித்து வரும் ஆதரவிற்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே நடைபெறும் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை இரட்டிப்பாக்க இருநாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. வணிகத்தைத் தாண்டி பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்த உறவு புதிய உயரத்தைத் தொடும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

