Last Updated:
மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையின் உட்பகுதியில் ஆய்வு செய்தபோது, மேலும் சிலரது குரல்கள் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 39 தொழிலாளர்கள் வரை இன்னும் அங்கு உயிருடன் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட ‘அப்பர் திரிசூலி 3A’ நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பதை காணலாம்.
நேபாள நாட்டில் கடந்த வாரம் புதன் கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்களின் உடல்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கியிருப்பதால், அவர்களை மீட்க இந்தியாவிலிருந்து சிறப்பு மீட்புக் குழுக்கள் மற்றும் பிரத்யேக இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேபாள ராணுவத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட நீர்மின் நிலையப் பகுதிகளில் இந்திய பணியாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திரிசூலி நதியில் உள்ள ‘அப்பர் திரிசூலி 3A’ நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சஞ்சய் சஹா மற்றும் கபீர் மகர்ஜன் என்ற இருவரும் அப்பர் திரிசூலி 3A’ நீர்மின் நிலையத்தின் இயந்திர மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்தனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள், 9 நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வந்துள்ளனர். இந்த இருவரையும் பெரும் சவால்களுக்கு இடையே மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.முதல் கட்டமாக, தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதியில் சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்கு இடையே சிறிய கம்ப்ரஸர் குழாய்கள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் சுரங்கத்தின் ஆழமான பகுதிக்குத் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. இதுவே உள்ளே இருந்தவர்கள் 9 நாட்கள் உயிருடன் இருக்க மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
பாறைகளுக்கு இடையே உள்ளே இருப்பவர்களின் நகர்வை கண்டறிய ‘அக்யூஸ்டிக் சவுண்ட் சென்சார்களை மீட்புக்குழுவினர் பயன்படுத்தினர். இதன் மூலம் அவர்கள் எந்தப் புள்ளியில் சிக்கியிருக்கிறார்கள் என்பது துல்லியமாகக் கணிக்கப்பட்டது. பாறைகளையும் அடர்ந்த மண் சரிவுகளையும் துளைக்கப் பிரத்யேக கனரக டிரில்லிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சுரங்கப்பாதையின் குறுகிய இடைவெளிக்குள் செல்லக்கூடிய சிறிய எந்திரங்கள் மூலம் சகதியும் இடிபாடுகளும் கவனமாக வெளியேற்றப்பட்டன.
எந்திரங்கள் மூலமாகப் பாறைகளை உடைத்தால் சுரங்கப்பாதை மேலும் இடிந்து விழும் ஆபத்து இருந்ததால், கடைசி கட்டத்தில் மீட்புப் படை வீரர்கள் கைகளால் சகதியை அப்புறப்படுத்தினர். சிறிய இடைவெளி உருவாக்கப்பட்டதும், மீட்புக் குழுவினர் பாதுகாப்பு கயிறுகள் மற்றும் ஆக்ஸிஜன் மாஸ்க்குகளுடன் உள்ளே ஊர்ந்து சென்று, சஞ்சய் சஹா மற்றும் கபீர் மகர்ஜன் ஆகிய இருவரையும் ஸ்ட்ரெச்சரில் கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
சுரங்கப்பாதை பகுதி மிகக் கடினமான மலைப் பகுதி என்பதால், அங்கிருந்து உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காட்மாண்டுவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையின் உட்பகுதியில் ஆய்வு செய்தபோது, மேலும் சிலரது குரல்கள் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 39 தொழிலாளர்கள் வரை இன்னும் அங்கு உயிருடன் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. உள்ளே சிக்கியுள்ளவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் வாயுவை பொறியாளர்கள் குழாய்கள் மூலம் செலுத்தி வருகின்றனர். மீட்புப் படை வீரர்கள் தீவிரமாகத் தோண்டி அவர்களை வெளியே கொண்டுவர முயன்று வருகின்றனர்.

