Last Updated:
ஆந்திராவில் ரிலையன்ஸ் ஆலை 12 மாதங்களில் செயல்பாட்டுக்கு வந்ததாக நாரா லோகேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்துடன் தொழில் முதலீட்டு விவகாரத்தில் வார்த்தைப் போர் தொடர்கிறது.
கர்னூலில் அடிக்கல் நாட்டப்பட்ட 12 மாதங்களில் ஆசியாவின் மிகப் பெரிய ரிலையன்ஸ் குளிர்பான ஆலை செயல்பாட்டுக்கு வந்ததாக வீடியோ வெளியிட்டு அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சூசக பதிலளித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், அதில் தமிழக அரசின் கீழ் செயல்படும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து அதிக பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவர்கள் ஆந்திர அரசு நிறுவனங்களில் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படும் நிலையில் தமிழ்நாட்டுக்கு வரும் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவிற்கு கசிவதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இதற்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் பதில் தருவதுதான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் ரகசியம் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், முதலீட்டாளர்களுக்கு வேகமாக பதிலளிப்பதைவிட வேகமாக செயல்படுவதுதான் முக்கியம் என தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலில் அடிக்கல் நாட்டப்பட்ட 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு ஆசியாவின் மிகப் பெரிய ரிலையன்ஸ் குளிர்பான ஆலை செயல்பாட்டுக்கு வந்ததாக நாரா லோகேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

