அம்மா ஆட்சியின்போது, தேசிய அளவிலான GDP-யுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் GDP கூடுதலாக இருந்தது. `தான் திருடி பிறரை நம்பாள்’ என்பதுபோல், இன்றைய ஏமாற்று அரசின் ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியாக இருந்தபோது அம்மா அரசின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதை மக்கள் மறக்கவில்லை. நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த இந்த விடியா தி.மு.க அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்குப் பணப் பலன் அளிக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல், `கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’ செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

விடியா அரசின் அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களே, `குறுகியகாலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, இந்த ஆட்சியின் ஊழலைப் பறைசாற்றுகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஏழைப் பங்காளனாகவும், ஊழலை ஒழிக்கும் போராளியாகவும், சாமானிய மக்களின் தோழனாகவும் நடித்து பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை நம்பவைத்து, வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும், அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச்சுற்றுலா சென்று வந்தவர்தான், இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.

