இதனால் இவரது தொழில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், நந்தகுமாரின் இந்த வளர்ச்சி அவருடன் அதே காலகட்டத்தில் தொழில் தொடங்கிய சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் முக்கியமானவர் அமுல். நந்தகுமாருடன் முன்பு இணைந்து பணியாற்றியவர். தற்போது சாலை மார்க்கெட்டில் ‘Attukal Gold and Silver Testing’ என்ற பெயரில் தங்கம், வெள்ளியின் தரத்தைப் பரிசோதிக்கும் கடையை நடத்தி வருகிறார். நந்தகுமாரைப் போலவே இவரும் தங்கத்தின் தரத்தைப் பரிசோதிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அவரது வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல், அமுலின் நண்பரான திலீப்பும் சாலை மார்க்கெட்டில் சிறிய அளவில் தங்க வியாபாரம் செய்து வந்தவர். இவரது தொழிலும் நந்தகுமாரின் வியாபார வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொருவர் ஜெயராம். இவர் அதே சாலை மார்க்கெட்டில் ‘மாளவிகா ஜுவல்லரி’ என்ற நகைக்கடையை நடத்தி வருகிறார். நந்தகுமாரின் தொழில் வளர்ச்சி தனக்கும் போட்டியாக இருப்பதாக கருதிய அவரும் நந்தகுமாருக்கு எதிராக விரோதப் போக்குடன் இருந்து வந்துள்ளார். இப்படி ஒரே சந்தையில் தங்கம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருந்த அமுல், திலீப், ஜெயராம் ஆகிய மூவரும் இணைந்து நந்தகுமாரின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டம் போட்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, காயம்குளம் பகுதியைச் சேர்ந்த பெரிய வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிக அளவிலான தங்கக் கலவையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை நந்தகுமார் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் நந்தகுமாரின் தொழில் மேலும் வளர்ச்சியடையும் என்பதால், அந்த வியாபாரத்தைத் தடுத்து அவரது நம்பகத்தன்மையைக் குலைக்க வேண்டும் என மூவரும் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக அமுல், குற்றப் பின்னணி கொண்ட அனூப் ராஜை அணுகியிருக்கிறார். அனூப் ராஜ் இந்தக் கொள்ளையைச் செய்யும் வேலையை அனில் பிரசாத் என்கிற ஷேடோ அனியிடம் ஒப்படைத்துள்ளார்.
அனில் பிரசாத், கொள்ளையைச் அரங்கேற்றுவதற்கு முன்பாக, நந்தகுமாரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஷ்ரவன் என்பவரை நியமித்துள்ளார். இவர் தான் இந்தக் கும்பலின் ‘ஸ்பாட்டர்’ எனப்படும் ஆள் கண்காணிப்பாளராக செயல்பட்டிருக்கிறார். ஒரு வாரத்துக்கும் மேலாக நந்தகுமாரின் கடை, வீட்டுக்குச் செல்லும் வழி, அவர் தங்கத்தை எடுத்துச் செல்லும் நேரம் என ஒவ்வொரு தகவலையும் ஷ்ரவன் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளைக்காக சுமார் 25 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டதாகவும், அதில் 4 லட்சம் ரூபாய் முன்பணமாக அனிலுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பனவிளா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அமுல், திலீப், ஜெயராம், அனூப் ராஜ் ஆகியோர் சந்தித்துத் திட்டமிட்டிருக்கின்றனர். கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பாக இரண்டு நாட்கள் ஒத்திகையும் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்குப் புறப்பட்டார் நந்தகுமார். அன்றைய தினம் வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 2 கிலோ தங்கத்தைப் பையில் எடுத்துச் சென்றுள்ளார். அவர் வழக்கமாகச் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சபாபதி கோயில் சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர், நந்தகுமாரின் தோளில் இருந்த தங்கப் பையைப் பறிக்க பின் இருவரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறி தப்பியுள்ளனர்.
பின்னர் அந்த பைக்கைக் கைவிட்டு, தயாராக இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். நகையை பறிகொடுத்த நந்தகுமார் அதிர்ச்சியில் உறைந்து போனார். அது குறித்து உடனே போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் அருள் பி. கிருஷ்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. சம்பவ இடம் மற்றும் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான பைக்கின் பதிவு எண் மூலம் அனில் பிரசாத் என்கிற ஷேடோ அனியின் அடையாளம் தெரியவந்தது.
ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவரது புகைப்படத்தை தென்னிந்திய மாநிலங்களின் காவல்துறை வட்டாரங்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தமிழ்நாடு, பெங்களூரு, மைசூரு வழியாகச் சென்றதும், பின்னர் வயநாடு பகுதிக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வயநாடு மாவட்டம் படிஞ்ஞரத்தரா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்குவதற்காகச் சென்ற கும்பலை திருவனந்தபுரம் போலீசாரின் தனிப்படை சுற்றிவளைத்தது.
அப்போது ஷ்ரவன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அனில் பிரசாத், அனூப் ராஜ், வினோத் ஆண்டனி உள்ளிட்டோர் பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருவனந்தபுரத்தில் இருந்த அமுல், திலீப் ஆகியோரும் பிடிபட்டனர். இதுவரை இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய ஷ்ரவன் பின்னர் சரணடைந்துள்ளார். ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட 2 கிலோ தங்கமும் உடனடியாகக் கிடைக்கவில்லை. முதலில் வயநாட்டில் பிடிபட்டவர்களிடமிருந்து சுமார் 450 முதல் 488 கிராம் வரை தங்கம் மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள தங்கத்தைத் தேடி விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், தகவலின் பேரில் வெள்ளாயணி பகுதியில் உள்ள ஆளில்லாத இடத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு புதைக்கப்பட்டிருந்த 146 பவுன் தங்கத்தை போலீசார் மீட்டனர். இதனால் வயநாட்டில் கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் சேர்த்து, மொத்தம் சுமார் 202 பவுன், அதாவது 1.6 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளது. தொழில் போட்டிக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையின் பின்னணியில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் வெளிவரப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
