செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஒரு மாதம் ஆகியும் சிறுமி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் திமுக எம்.பி. கனிமொழி.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இன்று செஞ்சியில் காணாமல்போன சிறுமி ஹேமலதாவின் இல்லத்திற்குச் சென்று, அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். பவானி மற்றும் வடிவேலு தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி.
இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி ஹேமாவதி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாள் காலையிலிருந்தே காணாமல் போயுள்ளார். அந்தப் பிஞ்சுக் குழந்தை மாயமாகி இன்றுடன் ஏறத்தாழ 35 நாட்கள் கடந்துவிட்டன.
இருப்பினும், அக்குழந்தையைக் கண்டுபிடித்து மீட்பதற்கு இந்த அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குழந்தையைக் காணவில்லை என்றதும் பெற்றோர்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி 2013-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவானதொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு குழந்தை காணாமல் போனால் அதை வெறுமனே ‘காணவில்லை’ என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யக் கூடாது; மாறாக, 24 மணி நேரத்திற்குள் ‘கடத்தல்’ (Kidnapping) அல்லது ‘குழந்தை கடத்தல்/விற்பனை’ (Trafficking) என்ற பிரிவுகளின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இவ்வழக்கில் அதிகாரிகள் ‘காணவில்லை’ என்று சாதாரணமாகப் பதிவு செய்திருப்பது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
குழந்தைகள் நலத்துறை மற்றும் காவல்துறை ஆகிய இரண்டு முக்கியத் துறைகளுமே முதலமைச்சர் விஜய் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளன. ஆனால், அரசு இந்த விவகாரத்தில் எவ்வித அக்கறையுமின்றி மெத்தனமாகச் செயல்படுகிறது.
தேர்தல் காலத்தில் இதே குழந்தைகளைப் பார்த்து “நண்பா, நண்பி” என்று பாசத்துடன் அழைத்து, “வீட்டில் சென்று அடம் பிடித்து எனக்காக வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று கேட்டு வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் இன்று இந்தப் பதவியில் அமர்ந்துள்ளார்.
அப்படியிருக்க, தனக்கு வாக்கு சேகரித்துக் கொடுத்த அதே குழந்தைகளின் பாதுகாப்பில் இத்தகைய அலட்சியம் காட்டுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
முதலமைச்சர் நேற்று குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார். ஆனால், குழந்தைகளுக்குக் கேக் ஊட்டச் செல்லும் முதலமைச்சர், காணாமல் போன சிறுமியின் வீட்டிற்கு நேரில் வந்து, “நாங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தையைக் கண்டுபிடித்துத் தருவோம்” என்று அந்தப் பெற்றோருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் கூறியிருக்கலாம்.
முதலமைச்சர் கூட வர வேண்டாம், இப்பகுதிக்குப் பொறுப்பான அமைச்சராவது நேரில் வந்து அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறியிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
மாவட்டச் செயலாளர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளார்.

நாங்கள் வரும் வழியெங்கும் அதற்கான பதாகைகளும் கொடிகளும் கட்டி ஆடம்பரமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு சரியான முயற்சியையும் அவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை.
குழந்தை மாயமாகி 35 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குழந்தை கிடைக்குமா, எங்கே இருக்கிறது என்பது குறித்த ஒரு சிறிய தகவலைக் கூடத் தந்து, பெற்றோருக்கு நம்பிக்கையோ ஆறுதலோ அளிக்கும் விதத்தில் அரசுத் தரப்பிலிருந்து எதுவும் செய்யப்படவில்லை.
இங்கு மட்டுமல்ல, இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஏராளமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக, கடலூரில் மட்டும் ஒரே நாளில் பல குழந்தைகள் காணாமல் போன மிகப்பெரிய அவலமும் அரங்கேறியுள்ளது.
கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், மற்றும் ஒரு தாயும் குழந்தையும் எனப் பலர் காணாமல் போயுள்ளனர். இத்தனை சம்பவங்களுக்கும் இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வதற்குக் கூடத் தைரியமில்லாதவர்களாகத்தான் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளனர்.
ஏனெனில், முதலமைச்சரே தனது பாதுகாப்பைப் பற்றிப் பயப்படும் நிலையில்தான் உள்ளார். நேற்று கொளத்தூர் சென்றபோது, அவருடைய ரசிகர் ஒருவர் அருகில் வந்ததுமே, தன் ஆட்சியிலேயே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவரே பயந்துவிட்டார். அத்தகையதொரு ஆட்சியைத்தான் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். யாரிடம் வாக்கு கேட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்களோ, அந்தக் குழந்தைகளுக்குக் கூடப் பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு தரமற்ற, அலங்கோலமான ஆட்சியை இவர்கள் நடத்தி வருகின்றனர்.
தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் தவறுகள் நடக்கும்போது கூட, கொஞ்சமும் பொறுப்பின்றி வாயைத் திறக்காமல் மௌனம் காக்கும் இப்படியொரு முதலமைச்சரைத் தமிழ்நாடு இதுவரை பார்த்ததே கிடையாது. இப்போது கூட, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்திய பிறகுதான், அரசு இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றியுள்ளது.
எதுவாக இருந்தாலும் திமுக சொன்ன பிறகுதான் இந்த அரசு செயல்படும் என்றால், அதற்கு நேரடியாக திமுகவே ஆட்சியில் இருக்கலாமே? நாங்கள் சொல்லிக் கொடுத்துதான் நீங்கள் செயல்பட வேண்டுமா?

“குழந்தைகளும் பெண்களும் பாதுகாக்கப்படுவார்கள், ஒரு அசம்பாவிதம் கூட நடக்காது” என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. எந்தப் பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. சொல்லப்போனால், ஆளுங்கட்சியாலேயே பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆனால், அந்தச் சம்பவங்களையும் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவ்வளவு குற்றங்கள் நடந்தன, அதற்கு முந்தைய ஆண்டு இவ்வளவு நடந்தன என்று ஒப்பீடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். “கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 6 குற்றங்கள் நடைபெற்றன, இந்த ஆண்டு 11 குற்றங்கள் நடைபெற்றுள்ளன” என்று அவர்களே ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.
திமுக ஆட்சியில் 11 ஆக இருந்த குற்றங்களை 6 ஆகக் குறைத்திருந்தோம். ஆனால் நீங்கள் அதை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு சென்றுவிட்டீர்கள். தாங்களே வெட்கப்படக்கூடிய அளவிற்கு அவர்களே பேசி வருவதுதான் இன்றைய ஆட்சியின் நிலை. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அடுத்தகட்டமாக திமுக சார்பில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் தலைவர் இது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்திப் பேசி வருகிறார். சட்டமன்றம் கூடும்போது அங்கும் இது குறித்துக் குரல் எழுப்ப முடியும்.
ஆனால், ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மனசாட்சியோடு செயல்பட்டு, இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்குக் காவல்துறையை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு, தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்கும் சுயநலத்திற்கும் மட்டுமே இந்த அரசாங்கத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் குற்றம் நடந்த பிறகாவது குற்றவாளிகளைக் கண்டறிந்து, காணாமல் போன குழந்தைகளையும் பெண்களையும் மீட்டெடுப்பதற்கான வழிவகைகளை அவர்கள் கண்டறிய வேண்டும். அதைச் செய்யாமல், யாருக்குமே நம்பிக்கையில்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
முதலமைச்சருக்கே தனது ஆட்சியில் தனக்குப் பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது. நேற்று பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கேக்கில் ‘ஆல் இஸ் வெல்’ (All is Well) என்று வாசகம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். இதைவிடச் சிறந்த முரண்நகை வேறு எதுவும் இருக்க முடியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
