பி சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா பாகம் 16 (தமிழ்) மற்றும் பாகம் 4 (ஆங்கிலம்) நூல்கள் வெளியீட்டு விழா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “கடந்த 2024-ம் ஆண்டு, நீதியரசர் மகாதேவன் அவர்களுடன் இணைந்து நான் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருந்தேன். 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட அந்த வழக்கில், நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் நடந்த முறைகேடுகளுக்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அனைத்து நூலகங்களிலும் ‘வீரம் விளைந்த வரலாறு’ என்ற பெயரில் ஒரு புத்தகம் இருக்கும். இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்து அரசாங்கத்தால் வாங்கப்பட்ட அந்தப் புத்தகம் வேறு ஒன்றுமில்லை; கல்கியின் புகழ்பெற்ற ‘சிவகாமியின் சபதம்’ நாவலின் மேலட்டையை மட்டும் மாற்றி அச்சிடப்பட்ட போலிப் பிரதியாகும். இத்தகைய பல உதாரணங்களை எனது 2024-ம் ஆண்டு தீர்ப்பில் சுட்டிக்காட்டி, புத்தகக் கொள்முதலில் இத்தகைய மிகப்பெரிய மோசடிகள் இனி நடக்கக் கூடாது என எச்சரித்திருந்தேன்.
மேலும், எதிர்காலத்தில் புத்தகக் கொள்முதல் எவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருந்தேன்.
ஆனால், 2024-ல் இத்தனை உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும், 2025-லும் அதே போன்ற முறைகேடுகள் மீண்டும் நடந்துள்ளன என்பதை அறியும்போது எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகவே, நான் இந்த வழக்கில் தொடர்ந்து அடுத்தடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறேன். இதன் தொடர்ச்சியாக, வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கும் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளேன்.

முன்னதாக 2024-ம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புத்தகக் கொள்முதலில் வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றப்போவதாகக் கூறி அரசாங்கம் ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. ஆனால், `கங்கையில் குளித்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சொல்வார்கள்; அதுபோல வெறுமனே ஒரு அரசாணையைப் பிறப்பித்துவிட்டால் மட்டும் நீங்கள் செய்த பாவங்கள் போய்விடாது. இப்போது என்னென்ன தவறுகள் நடந்துள்ளனவோ அவை அனைத்தையும் நீங்கள் சரிசெய்தே ஆக வேண்டும். தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று நான் எனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும், எதுவும் முறையாக நடக்காததே தற்போதைய பிரச்னைகளுக்குக் காரணமாகும்.
இப்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ‘பெரியார் அறிவுலகம்’ என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கின்றன.
அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், இந்த மகாபெரியவா புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும், அனைத்துப் பெரியார் அறிவுலக நூலகங்களின் அடுக்குகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்தப் பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.” என்றார்.
நீதிபதியின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதமானது. இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “”பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார். நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
