நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ஆளுங்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? விசாரணையில் ஏன் தாமதம் ஏற்பட்டு வருகிறது? அப்படியென்றால், முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி பொது வெளியில் எழுகிறது. இந்த நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நியமிக்கப்பட்ட குழுவில் உள்ள நபரே ஊழல் நடந்துள்ளது எனத் தெரிவித்த பின்னரும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

முந்தைய தி.மு.க ஆட்சியில் நூல்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் த.வெ.க ஆட்சியில்தான் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. உண்மையான எழுத்தாளர்களின் புத்தகங்களைத்தான் வைத்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது இந்த அரசின் கடமை. திரிஷா விஜய் என்ற ஒரு எழுத்தாளரின் பெயரிலும் பல்வேறு முகம் தெரியாத எழுத்தாளர்களின் பெயர்களிலும் புத்தகங்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே அந்த புத்தகங்கள் இருந்ததா என சம்மந்தப்பட்ட அமைச்சர் தெளிவாக விளக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. தமிழகத்தின் நிதி நிலை குறித்தும் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் முரணாகச் செயல்பட்ட ஆய்வாளர், ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிக்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் த.வெ.க அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது. இந்த அரசும் விரைவில் அகற்றப்படும். தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமாகி 25 நாள்களைக் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதனால்தான் சமீபத்தில் 300 அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்கள். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. தேர்தல் வரும்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தலைமைக்கு தெரியப்படுத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.” என்றார்.
