Last Updated:
பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீப் பட் மற்றும் உமர் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 11-ஆம் தேதி குல்காம் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் (CRPF) சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய சதிகாரர் லத்தீப் பட் எனக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிக்கப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று குல்காம் மாவட்டத்தின் லாரூ கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இந்திய ராணுவத்தின் அருகிலுள்ள படைப்பிரிவுகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை ஆகியவை இணைந்து அந்தப் பகுதியை முழுமையாகச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையைத் தொடங்கின.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த என்கவுண்டரில் லஷ்கர் தளபதி லத்தீப் பட் மற்றும் உமர் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த லத்தீப் பட்டின் அடையாளத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் யாசிர் யூசுப் என்பதும் சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குல்காம் தாக்குதல் மற்றும் கிஷ்த்வார் பகுதியில் இரண்டு சிறப்புக் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குல்காம் மாவட்டத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

