Last Updated:
முதல்முறையாகத் தாயான 11 வயது தாய் யானை, பதற்றத்தில் உதைத்ததில் குட்டியின் பின் வலது கால் தொடை எலும்பு (Femur) முறிந்தது.
பிறந்த முதல் நாளிலேயே கால் எலும்பு முறிந்து கடுமையான உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் 7 வார வயதான ‘ராஜா’ என்ற யானைக்குட்டியைக் காப்பாற்ற, அசாமில் இருந்து குஜராத்தில் உள்ள ‘வந்தாரா’ (Vantara) வனவிலங்கு பராமரிப்பு மையத்திற்குச் சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வந்தாரா நிறுவனத்தின் நிறுவனர் அனந்த் அம்பானியின் முயற்சியால் மேற்கொள்ளப்படும் இந்த மூன்றாவது விமான மீட்புப் பணி, இன்று குவாஹாட்டியில் இருந்து ஜாம்நகருக்கு சுமார் 4 மணி நேரப் பயணமாக நடைபெற்றது. 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைப் பயணம் இந்தச் சிறிய யானைக்குட்டிக்கு ஆபத்தானதாக அமையக்கூடும் என்பதால், வான்வழிப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2 அன்று அசாமின் கோகாமுக் பகுதியில் இந்த யானைக்குட்டி பிறந்தது. முதல்முறையாகத் தாயான 11 வயது தாய் யானை, பதற்றத்தில் உதைத்ததில் குட்டியின் பின் வலது கால் தொடை எலும்பு (Femur) முறிந்தது. மேலும், தாய்ப்பால் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் முதல் பாலை (Colostrum) குடிக்க முடியாததால், குட்டியால் நிற்கவோ உடல் எடையைத் தாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.
அக்டோபர் 8 முதல் வந்தாரா மருத்துவக் குழுவினர் போஹுமாராவில் உள்ள உரிமையாளரின் வீட்டிலேயே குட்டிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்; எலும்பு முறிவுக்குப் பிளாஸ்டர் மற்றும் ஸ்லிங் (Sling) உதவியுடன், அருகிலேயே நீச்சல் குளம் அமைத்து ஹைட்ரோதெரபி (Hydrotherapy) சிகிச்சையும் வழங்கப்பட்டது.
இருப்பினும், க்ளெப்சியெல்லா நிமோனியா (Klebsiella pneumoniae) பாக்டீரியா தொற்று, வயிற்றுப்போக்கு, ரத்தச் சர்க்கரை அளவு குறைவு, கல்லீரல் அழுத்தம், தலையில் அழுத்தப் புண்கள் மற்றும் தொப்புள் ஹெர்னியா (Umbilical Hernia) போன்ற சிக்கல்களால் யானைக்குட்டியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
எனவே, அதிநவீன மருத்துவ வசதிகள் மற்றும் தொடர் கண்காணிப்பிற்காக ஜாம்நகரில் உள்ள வந்தாரா யானைகள் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானப் பயணத்தின் போது அதிர்வுகள் மற்றும் காயங்களுக்கு அழுத்தம் ஏற்படாத வகையில் சிறப்புக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளதுடன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் குழு உடன் பயணித்து உயிர் காக்கும் சிகிச்சைகளைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர்.

