Last Updated:
பிப்ரவரி 2025-இல் பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பார்ட் டி வேவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்ட் டி வேவர் பிரதமர் நரேந்திர மோடியை உலகின் மிகச் சிறந்த மற்றும் உத்வேகமளிக்கும் தலைவர்களில் ஒருவர் என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியா – ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (India-EU FTA) தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய பெல்ஜியம் பிரதமர், “இன்றைய சூழலில் பல உலகத் தலைவர்களின் உரைகளைக் கேட்கும்போது அச்சமும், கவலையும், அச்சுறுத்தலுமே தோன்றுகிறது. ஆனால், பிரதமர் மோடி பேசும்போது ‘அவர் சொல்வதை நாம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் தான் வருகிறது. அவர் மிகவும் புத்தி கூர்மையும், பகுத்தறிவும் கொண்ட ஒரு சிறந்த வழிகாட்டி” என்று புகழாரம் சூட்டினார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாகத் தள்ளிப்போன தமது இந்தியப் பயணம் தற்போது சாத்தியமாகி உள்ளதாகவும், புதுடெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தது தமக்குக் கிடைத்த பெரும் கௌரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீரற்ற வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிகளைப் பற்றிய மறைமுக விமர்சனத்தை அவர் முன்வைத்தார். இதுபற்றி பேசிய பெல்ஜியம் பிரதமர், “திங்கட்கிழமை ஒரு வரியை விதிக்கிறார்கள், புதன்கிழமை அதை ரத்து செய்கிறார்கள், மீண்டும் சனிக்கிழமை அதே வரியை அமல்படுத்துகிறார்கள். வர்த்தகத் தடைகளை உருவாக்குவதையும் சந்தைகளை மூடுவதையும் விடுத்து, பொருளாதாரக் கூட்டுறவையும் திறந்த சந்தைக் கொள்கையையும் வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
பிப்ரவரி 2025-இல் பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பார்ட் டி வேவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருநாட்டுப் பிரதமர்களின் சந்திப்பின் போது, அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத்துறை சார்ந்த கூட்டுறவை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoU) கையெழுத்தாகியுள்ளன.

