Last Updated:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே செவிலியரை வீடு புகுந்து கழுத்தை நெரித்துக் கொன்று, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சைக்கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் சனாலுல்லா என்பவர் பிழைப்பிற்காக குடும்பத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் வந்துள்ளார். பல இடங்களில் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்த அவர் மூன்று மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள பகாடி ஷரீஃப் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை செய்து வந்த சனாலுல்லா, 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை இன்டர்நெட் மூலம் செல்போனில் தரவிறக்கம் செய்து அவற்றைத் தினமும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இது தவிர ஆபாச புகைப்படங்கள், தன்னுடைய கர்ப்பிணி மனைவியின் நிர்வாண புகைப்படம் என அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்தான் சனாலுல்லா வேலை செய்யும் மெக்கானிக் ஷாப் பின்புறம் உள்ள கட்டடத்தில், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நான்கு இளம்பெண்கள் தங்கி இருந்தனர். மெக்கானிக் கடை ஜன்னலில் இருந்து பார்த்தால் அவர்களுடைய நடமாட்டம் நன்கு தெரியும்.
அவர்களையும் ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுத்து வக்கிர செயலுக்குத் திட்டமிட்டுள்ளார். கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு, நர்சுகள் தங்கி இருந்த கட்டடத்திற்குச் சென்ற சனாலுல்லா, அறையின் ஜன்னலைப் பெயர்த்து எடுத்து உள்ளே புகுந்தார். கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் 21 வயது செவிலியர் ஸ்ரீஷா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது அறைக்குள் சனாலுல்லா சென்றுள்ளார். இதனால் ஸ்ரீஷா அலறியடித்து எழுந்து பார்த்தபோது, சனாலுல்லா கொடூரமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டு கத்தி கூச்சலிட்டார். உடனே ஸ்ரீஷாவை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்து சனாலுல்லா துடிதுடிக்க அவரை கொலை செய்தார். பின்னர் சடலத்துடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வக்கிர புத்தியுடன் நடந்து கொண்டார்.
மறுநாள் வேலைக்குச் செல்ல ஸ்ரீஷா தயாராகாத நிலையில் சக தோழிகள் அவருடைய அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு துடிதுடித்துப் போனார்கள். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ஸ்ரீஷாவின் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்க போலீசாருக்கு எவ்விதமான தடயமும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்த போது 29ஆம் தேதி அதிகாலை மிகவும் பதட்டமான நிலையில் சனாலுல்லா மோட்டார் சைக்கிளில் ரவுண்டு அடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அந்த ஒரு காட்சியை ஆதாரமாகப் பிடித்துக் கொண்ட போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். இதனால் சனாலுல்லா மீது கடும் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களுடைய பாணியில் விசாரணை நடத்தியபோது, ஸ்ரீஷாவை கொலை செய்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனை அடுத்து கொடூரக் கொலையாளியான இவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது சனாலுல்லாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் 150-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், ஏராளமான ஆபாச புகைப்படங்கள், அவனுடைய மனைவியின் நிர்வாண புகைப்படம் உள்ளிட்டவை இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஸ்ரீஷாவின் உயிரிழப்பு ஒட்டு மொத்த தெலங்கானாவையும் சோகத்துக்கு உள்ளாக்கி உள்ளது. குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் கண்ணீருடன் வலியுறுத்தி உள்ளனர்.

