வடக்கு நகரப் பொறுப்பாளரான ராதா என்ற பெண் நிர்வாகி பேசும்போது, “மாவட்டச் செயலாளர் சத்யா என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக ஆரம்பத்தில் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. ஒருக்கட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த்தையும் சந்தித்து புகார் கொடுத்துவிட்டு வந்தேன். அதன்பின்னர், என்னை கட்சிப்பதவியில் இருந்து விலகிச் செல்லுமாறு மிரட்டினார் மாவட்டச் செயலாளர் சத்யா. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றேன்.
இதையடுத்து, என்னுடைய பர்சனல் விவகாரங்களை எல்லோரிடம் தெரியப்படுத்தி என்னுடைய நடத்தையை தவறாக சித்திரித்து வந்தார். என்னுடைய பர்சனலை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமையோ, தகுதியோ கிடையாது. இவரால் என் மாமியார் வீட்டிலும் எனக்கு ஏகப்பட்ட பிரச்னை வந்தது. இப்போதுதான் மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யாவுக்கு எதிராக வெளியே வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு ஆளு கட்சியில் இருக்கக் கூடாது. விஜய்க்கு ரொம்ப ரொம்ப அவமானத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு கேவலமான ஒரு ஜென்மம்.

ஏற்கெனவே, நான் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகாரளித்துள்ளேன். போலீஸார் என்னை அழைத்து விசாரித்தபோது, `கட்சிரீதியாக கொண்டு போங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்’’ என்றார்.
இன்னொரு பெண் நிர்வாகியான தமிழ்ச்செல்வி என்பவர் பேசும்போது, “இரண்டு நாளைக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் சத்யா தனிமையில் இருந்தார். அதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை கைப்பற்றி வைத்திருக்கிறோம்’’ என்றார்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆரணி டி.எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்ற பெண் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் சத்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர். குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்க மாவட்டச் செயலாளர் சத்யாவை தொடர்புகொண்டபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் இந்த விவகாரம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
