மதுரை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறையில் தனி உளவுப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய திருமாவளவன், “டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால். அது தேசத்திற்கான பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது.
ஈகோ பிரச்சனை விடவேண்டும்:
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை, காங்கிரஸ் ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. டெல்லி தேர்தல் அடிப்படையாகக் கொண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் சிந்திக்க வேண்டும் என விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
மதப் பிரச்சினைகளை கிளப்பி அரசியல் ஆதாயம்:
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். வாழ விரும்புகின்றனர். பாரதிய ஜனதா போன்ற சங்பரிவார கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ்நாட்டில் மதப் பதற்றங்களை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் வடமாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களை நிறுத்தி இரு சமூகத்திலும் பலியை கொடுத்து மதப் பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.
இந்து சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத பாஜக, கோயில், மசூதி போன்ற பிரச்சனைகளை தூண்டி மதப் பிரச்சினைகளை கிளப்பி அரசியல் ஆதாயம் தேடும் வழிமுறைகளை தான் கையாண்டு வருகிறார்கள். இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாஜகவிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தற்போது அமைதியாக உள்ளது மதவெறியர்களை அனுமதிக்க கூடாது.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை:
பாலியல் குற்றங்களை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன என்பது புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வருகிறது. எப்படி தலித்துகளுக்கு சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் பெருகி வருகிறதோ, அப்படித்தான் பாலியல் குற்றங்களும் பெருகி வருகின்றன. பாலியல் குற்றங்கள் பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தனி உளவு பிரிவு:
தற்போது கர்ப்பிணிக்கு எதிராக செய்த குற்றவாளியை மாணவிக்கு எதிராக குற்றங்களை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் இதற்கென்று தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும்.
ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை குறித்து ஒன்றிய அரசிடம் நமது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரிய அதிகாரிகளோடு சந்தித்து கூறியுள்ளார். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்த அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர் தனது நிலைப்பாட்டில் அப்போது உறுதியாக இருந்தார். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு இசைவு தந்தால் மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று உடும்பு பிடியாக பேசினார். இது வன்மையான கண்டனத்துக்குரியது.
எனவே, தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற இந்த நிலைப்பாடு சரியானது. இதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த நிதியை பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றத்தை அணுகி நிதியை பெறுகிற நீதியை வென்றெடுக்க வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் எடுக்கிற சட்டம் ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதற்றத்திற்கு காரணமாக அமைகின்றன. அவர்களாக கற்பனை செய்து கொள்வது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும். அதனால் நாங்கள் தடை உத்தரவு போடுகிறோம் என்று மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவு தான் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது. அவழக்கமாக சிறுபான்மையினர் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து அவர்களை அங்கே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது மாவட்ட நிர்வாகம். திருப்பரங்குன்றத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நிலைபாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதில் மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.
நீதிமன்றமும் துணை போவதா?
கோவை அருகே பேரூர் சத்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள். நீதிமன்றம் முதலில் அந்த அனுமதியை வழங்கியது. மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழர்கள், தமிழில் வழிபாடு செய்வதற்கும், தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணையாக இருப்பது கவலையளிக்கிறது” என்றார்.

