Last Updated:
கல்லறையை சுற்றியுள்ள பகுதியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள முகலாய மன்னர் அவுரங்சீப்பின் கல்லறையை தொல்லியல் துறை தகர ஷீட்டால் மூடியுள்ளது. இதனை மையப்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகலாய மன்னர் அவுரங்கசீப் இந்தியாவை 1658 ஆம் ஆண்டு முதல் அவர் மரணமடைந்த 1707 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அவரது கல்லறை மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சாம்பஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ளது.
இந்த கல்லறையை மையப்படுத்தி சமீபத்தில் பிச்னைகள் வெடித்தன. இதனை அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் 3 துணை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 12 போலீசார் காயமடைந்தனர்.
இந்த கல்லறையை மையப்படுத்தி அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கல்லறையை சுற்றியுள்ள பகுதியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த பகுதி தற்காலிகமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவுரங்கசீப்பின் கல்லறையை நாசமாக்கவோ அல்லது அழிக்கவோ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இது சட்டம் ஒழுங்குக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பதற்றம் காணப்படும் கோட்வாலி, கணேஷ்பேத், தெஹ்சில், லகட்கஞ்ச், பச்பௌலி, சாந்திநகர், சக்கர்தாரா, நந்தன்வான், இமாம்வாடா, யசோதரநகர் மற்றும் கபில்நகர் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கல்லறையை பாதுகாக்கும் விதமாக அங்கு தகர ஷீட்டுகள் மூலம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். அங்கு வழிபாடுகள் நடத்துவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
March 20, 2025 4:12 PM IST
மகாராஷ்டிராவில் மூடப்பட்ட அவுங்கசீப்பின் கல்லறை.. சட்டம் ஒழுங்கு பிரச்னையால் தொல்லியல் துறை நடவடிக்கை

