Last Updated:
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். வைகோ பேச்சில் ஒரு வரியை நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவர்கள், அனாதைகளா என ஆவேசமாக வைகோ கேள்வி எழுப்பிய நிலையில், மீனவர்கள் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் நாள்தோறும் தாக்குதலுக்கு ஆளாவதாக குற்றம் சாட்டினார். ஆனால், மத்திய அரசு இதனை துளியும் கண்டுகொள்ளவில்லை என்று ஆவேசமாக பேசினார்.
அதில், “நாங்களும் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழ்நாட்டு மீனவர்கள் என்ன அனாதைகளா?. 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், பிரதமர், வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை செல்வதில் என்ன பயன் உள்ளது” என்று வைகோ கூறினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்கள் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
அதில், “வைகோ முன்வைத்த பிரச்சினையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மீனவர்கள் பற்றிய பிரச்சினை எழுப்பப்படும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரதமரே நேரடியாக தலையிட்டு தீர்வு காண்கிறார்” என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மீனவர்கள் விவகாரம் குறித்த வைகோ பேச்சில், ஒரு வரியை மட்டும் அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு நிர்மலா சீதாராமன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று, வைகோ பேசியதில் ஒரு வரியை மட்டும் நீக்குவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண சிங் கூறினார்.
Delhi Cantonment,New Delhi,Delhi
March 19, 2025 2:08 PM IST

