மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக எழுந்துள்ளது. இக்கோரிக்கைக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை மொகலாய மன்னர் ஔரங்கசீப்புடன் ஒப்பிட்டுப் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “ஔரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர். அவர் தனது சொந்த தந்தையையே சிறையில் அடைத்தார். அதோடு எதற்கெடுத்தாலும் மதத்தைக் கையில் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்றைக்கு ஔரங்கசீப்பிற்கு நிகரான கொடூரமான ஆட்சியாளராக பட்னாவிஸ் இருக்கிறார். பட்னாவிஸ் எப்போதும் துணைக்கு மதத்தை இழுக்கிறார். எனவே நிர்வாகத்தில் ஔரங்கசீப்பும், பட்னாவிஸும் ஒன்றுதான்”‘ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவரின் கருத்து குறித்துப் பேசிய மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, “ஹர்ஷ்வர்தனின் கருத்து குழந்தைத்தனமானது. பொறுப்பற்றது. மகாராஷ்டிரா அரசியல் கலாசாரத்தைக் களங்கப்படுத்தும் செயல். தேவேந்திர பட்னாவிஸை ஔரங்கசீப்புடன் ஒப்பிட்டதன் மூலம் மகாராஷ்டிராவைக் காங்கிரஸ் அவமதித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் மும்பை எம்.பி.அபு ஆஸ்மி அளித்திருந்த பேட்டியில், “ஔரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார். அதோடு அவர் கொடூரமான ஆட்சியாளர் கிடையாது. சத்ரபதி சாம்பாஜிக்கும், ஔரங்கசிப்பிற்கும் இடையே நடந்த போர் மாநில நிர்வாகத்திற்கானது. அது இந்து, முஸ்லிம் சண்டை கிடையாது. ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்திய எல்லை ஆப்கானிஸ்தான் எல்லை வரை நீண்டிருந்தது. இந்தியாவின் வளர்ச்சியும் 24 சதவீதமாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.
